திருப்பாணாழ்வார், பிறவாது பிறந்த தெய்வக் குழந்தையாய், உறையூரில் அவதரித்தவர். குழந்தைப் பேறு இல்லாத பாணர் குலத்தவர் ஒருவரால் அன்போடு பேணி வளர்க்கப் பட்டவர். அவர் புகுந்த குலத்தில் பிரசத்தி பெற்ற யாழ் இசையில் சிறு வயதிலேயே மிகுந்த தேர்ச்சி பெற்றதனால், 'பாணர்' என்றே அழைக்கப்பட்டார்.
ஒரு சமயம், அரங்கனைப் பற்றிப் பாடி, திருத்தொண்டு செய்ய விழைந்து, தான் தாழ்ந்த குலத்தவர் என்பதால், திருவரங்கத்திற்குள் நுழையத் துணியாமல், காவிரியின் தென்கரையில் நின்றபடி, அரங்கநாதரே பேருவகை கொள்ளும் வண்ணம், அற்புதமாக பல நாட்கள் பாடிக் கொண்டு இருந்தார். அங்கு வந்த குலப்பித்து மிக்க மாந்தர் அவரை எட்டிச் செல்லுமாறு பலமுறை பணிக்க, அரங்கனின் பக்தியில் திளைத்து, மோன நிலையில் நின்ற ஆழ்வார் அதைப் பொருட்படுத்தவில்லை.
சினமுற்ற அவர்கள், பாணர் மீது கல்லெறிந்தும், பக்திப் பரவசத்தில் இருந்த அவர், அவ்விடத்திலிருந்த அகலாமல் நின்றதைக் கண்டு அஞ்சி அகன்றனர். இச்செய்கையால், திருவுள்ளம் கலங்கிய, கோயிலில் எழிந்தருளிய ஸ்ரீரங்கப் பெருமானின் திருமேனியில் குருதி பெருக்குற்றது. பாணர் திருவரங்க நகரில் அடியெடுத்து வைக்க மறுத்ததால், அரங்கனே, அந்தணர் குலத் தலைவரான ஸோகஸாரங்க முனிவரை அழைத்து, பாணரை தோளில் சுமந்து தன் முன் அழைத்து வருமாறு பணித்தார்!
அவ்வாறே, மிகுந்த நிர்பந்தத்தின் முடிவில், ஸாரங்கனின் தோளில் ஏறி, திருமாமணி மண்டபத்தில் வீற்றிருந்த அரங்கநாதப் பெருமான் முன் வந்திறங்கிய திருப்பாணாழ்வார், அரங்கனை தரிசித்த திவ்ய அனுபவம் தந்த பேருவகையில், திருவாய் மலர்ந்தருளிய 'அமலனாதி பிரான்' பாசுரங்களுக்கு ஈடு இணை கிடையாது!!!
அப்பாடல்கள் சிலவற்றைக் காணலாம்!
அமலன் ஆதிபிரான் * அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,*
நிமலன் நின்மலன் நீதி வானவன், *நீள்மதிள் அரங்கத்து அம்மான், *திருக்
கமல பாதம் வந்து* என்கண்ணினுள்ளன ஒக்கின்றதே.
துண்ட வெண்பிறையான்* துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய-
வண்டுவாழ் பொழில்சூழ்* அரங்கநகர் மேய அப்பன்*
அண்டர் அண்ட பகிரண்டத்து* ஒரு மாநிலம் எழுமால்வரை, *முற்றும்-
உண்ட கண்டம் கண்டீர் *அடியேனை உய்யக்கொண்டதே.
கையினார் *சுரி சங்கனல் ஆழியர்,* நீள்வரை போல்-
மெய்யனார் *துளப விரையார் கமழ் நீள் முடியெம்
ஐயனார்,* அணியரங்கனார் *அரவின் அணைமிசை மேய
மாயனார்,*செய்ய வாய் ஐயோ.* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.
*************************************************
சேரநாட்டில், கோழிக்கோடு ஸ்தலத்தில், அரச வம்சத்தில் பிறந்த குலசேகரன், பகவான் ஸ்ரீராமபிரான் பேரில் தீவிர பக்தி கொண்டவர். ராமாயண கதாகாலட்சேபம் நடந்த சமயங்களில் கூறப்பட்டவற்றை, ராமர் மேல் அவருக்கிருந்த அன்பினால், வெகு காலத்திற்கு முன் நடந்தேறிய ராம வரலாற்றை அன்று தான் நடப்பதாக எண்ணிக் கொள்ளும் வழக்கம் உடையவர் இந்த ஆழ்வார்! இதனால், அவரிடம் ராமகதையை விவரிப்பவர்கள், ராமருக்கு துன்பம் நேர்ந்த பாகங்களை சுருக்கியும், ராமரின் கீர்த்தியையும், வீரத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் பாகங்களை விரிவாகவும் உரைத்து வந்தனர்! பெருமாளுடைய (ஸ்ரீராமர்) இன்ப துன்பங்களை தனது சுகதுக்கங்களாக கருதியதால் குலசேகரருக்கு 'பெருமாள்' என்ற திருநாமமும் உண்டு.
இவர் இயற்றிய பெருமாள் திருமொழியில், ராமனை குழந்தையாக பாவித்து தாலாட்டு பாடுவது போல் அமைந்த மிக அழகிய பாசுரங்கள், ராமன் மேல் அவருக்கிருந்த பேரன்பில் விளைந்தவை! அவற்றில் சில:
மன்னுபுகழ் கௌசலைதன்* மணிவயிறு வாய்த்தவனே*
தென்னிலங்கை கோன்முடிகள்* சிந்துவித்தாய் செம்பொன்சேர்*
கன்னி நன்மாமதிள் புடைசூழ்* கணபுரத்தென் கருமணியே*
என்னுடைய இன்னமுதே* இராகவனே தாலேலோ
மலையதனால் அணைகட்டி* மதிளிலங்கை அழித்தவனே*
அலைகடலைக் கடைந்து* அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே*
கலைவலவர் தாம்வாழும்* கணபுரத்தென் கருமணியே*
சிலைவலவா சேவகனே* சீராம தாலேலோ
தளையவிழும் நறுங்குஞ்சித்* தயரதன்தன் குலமதலாய்*
வளைய ஒரு சிலையதனால்* மதிளிலங்கை அழித்தவனே*
களைகழுநீர் மருங்கலரும்* கணபுரத்தென் கருமணியே*
இளையவர்கட்கு அருளுடையாய்* இராகவனே தாலேலோ
தேவரையும் அசுரரையும்* திசைகளையும் படைத்தவனே*
யாவரும் வந்து அடிவணங்க* அரங்கநகர்த் துயின்றவனே*
காவிரிநல் நதிபாயும்* கணபுரத்தென் கருமணியே*
ஏவரிவெஞ் சிலைவலவா* இராகவனே தாலேலோ
அடுத்து வரும் இரு பாசுரங்கள், அவரது பேரன்பு விளைத்த சொல்லாட்சியை பறை சாற்றுகின்றன!
பொய்சிலைக் குரலேற்று ஒருத்தமிறுத்து* போரர வீர்த்தகோன்*
செய்சிலைச்சுடர் சூழொளித்* திண்ணமாமதிள் தென்னரங்கனாம்*
மெய்சிலைக் கரு மேகமொன்று* தம் நெஞ்சில் நின்று திகழப்போய்*
மெய்சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து* என்மனம் மெய் சிலிர்க்குமே!
ஆதி அந்தம் அனந்த அற்புதமான* வானவர் தம்பிரான்*
பாதமாமலர் சூடும் பத்தியிலாத* பாவிகள் உய்ந்திட*
தீதில் நன்னெறி காட்டி* எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே*
காதல் செய்தொண்டர்க்கு எப்பிறப்பிலும்* காதல்செய்யும் என் நெஞ்சமே!
இவ்வாழ்வார் எழுதிய கீழுள்ள பாடலினால், விஷ்ணு ஆலயங்களின் உள்வாயிற்படி, "குலசேகரன் படி" என்றே இன்றும் அழைக்கப்படுகிறது!
செடியாய வல்வினைகள் தீர்க்கும்* திருமாலே*
நெடியானே வேங்கடவா* நின்கோயிலின் வாசல்*
அடியாரும் வானவரும்* அரம்பையரும் கிடந்தியங்கும்*
படியாய்க் கிடந்து* உன் பவளவாய் காண்பேனே
என்றென்றும் அன்புடன்
பாலா